வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அந்த வகையில் கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வயநாடு சூரல் மலைப்பகுதியில் காலை 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு இரண்டாவதாக மற்றொரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளால் பல மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருந்ததாவது “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது மிகவும் வேதனை தருகின்றது. இடுப்பாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருப்பது வேதனை அளிக்கின்றது. முழு வீச்சில் அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கின்றது” என்று அதில் தெரிவித்து இருக்கின்றார்.