Latest News
முன்னாள் இணை இயக்குநர் எல். மணிமாறன் மறைவு… மு.க.ஸ்டாலின் இரங்கல்…!
செய்தி மக்கள் தொடர்பு துறை முன்னாள் இணைஇயக்குனர் எல் மணிமாறன் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புதுறையில் முன்னாள் இணை இயக்குனராக பணியாற்றியவர் எல் மணிமாறன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டு இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது “செய்தி மக்கள் தொடர்பு துறையின் முன்னாள் இணை இயக்குனரும் எனது உறவினருமான எல் மணிமாறனின் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மணிமாறனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக செய்தி மக்கள் தொடர்பு துறை பணியாளர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கூறியிருக்கின்றார்.