tamilnadu
நிலச்சரிவால் கேரளாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு… 5 கோடி நிவாரணம் கொடுத்த தமிழக அரசு…!
வயநாடு நிலச்சரிவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து கோடி ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கின்றார்.
கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பல மாநிலத்தின் முதல்வர்களும் இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு சார்பாக ஒரு செய்தி குறிப்பு வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களும் சேதம் அடைந்திருக்கின்றது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்தார். முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கின்றார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு என கேரளா அரசுக்கு தமிழக அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 கோடி வழங்கிடவும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கின்றார். தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள மீட்பு குழுவில் தீயணைப்புத்துறையினரிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குனர் தலைமையிலும், 20 மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் செயல்படும் என்று கூறி இருக்கின்றார். இந்த குழுவானது இன்று கேரளாவிற்கு புறப்படுகின்றது” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.