இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய புதிய வடிவில் விநாயகர் சிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது பார்வையாளர்களை கவர்ந்திருக்கின்றது.
விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாட உள்ளது. அன்றைய தினம் மக்கள் கொழுக்கட்டை பழம், பூ, மாலை போன்றவற்றை வாங்கி விநாயகருக்கு படைத்து பூஜை செய்வது வழக்கம். ஏழு நாட்கள் வரை விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து விட்டு பின்னர் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கொண்டு சென்று மக்கள் கரைத்து விடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் மட்டுமில்லாமல் வடமாநிலங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. வருடா வருடம் விநாயகரை புதுப்புது வடிவத்தில் சிலையாக செய்து பார்வையாளர்களை கவர்ந்து விடுகின்றனர் சிலை அமைப்பாளர்கள். அந்த வகையில் திருப்பூரை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் என்பவர் வேட்டையன்பட ரஜினிகாந்த் கெட்டப்பில் விநாயகர் சிலையை செய்திருக்கின்றார்.
மேலும், ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தோற்றத்தை போலவும் களிமண்ணால் விநாயகர் சிலையை வடிவமைத்து அசத்தி இருக்கின்றார். இதேபோல் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்து காட்சிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைகள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றது.











