tamilnadu
நாளை இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கின்றது.
தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.