போலி பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரியை தொடங்கி ஆன்லைனில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்கள் தான் இருக்கின்றது. இதனால் பட்டாசுக்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அனைத்து பொருட்களுமே தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பட்டாசுகளையும் மக்கள் ஆன்லைனிலயே வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதற்கு ஏற்ப பல்வேறு பட்டாசு விற்பனை நிலையங்களில் இருந்து ஆன்லைன் ஆர்டர்களை பெற்று விற்பனையில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றது. அதிலும் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறைந்த வகையில் பட்டாசுகளை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருக்கிறார்கள்.
இதனை பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் வலை விரித்து கொண்டிருக்கிறார்கள். போலியான பெயர்களில் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரிகளை தொடங்கி ஆன்லைனில் பணத்தை வாங்கிவிட்டு பட்டாசுகளை அனுப்பாமல் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றது.
ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் மிக உஷாராக பட்டாசுகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆன்லைனில் சில்லறையில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதையெல்லாம் மீறிய ஆன்லைன் பட்டாசு விற்பனை அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் நடைபெற்று வருகின்றது.
இதனை பயன்படுத்தி தான் ஆன்லைனில் மோசடி கும்பல் ஏமாற்றுவதற்கான திட்டத்தை போட்டு இருக்கின்றன. பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் ஆர்டர் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளை எச்சரித்திருக்கிறார்கள்.

