tamilnadu
500க்கும் மேற்பட்ட பெண்கள்… அனைவரும் சேலையில்… வித்தியாசமாக நடைபெற்ற மாரத்தான் போட்டி…!
பெசன்ட் நகரில் இன்று பெண்கள் சேலை கட்டிக்கொண்டு மாரத்தான் ஓடிய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
மாரத்தான் ஓட்டம் என்றாலே பொதுவாக பேண்ட் டி-ஷர்ட் அணிந்து கொண்டு வியர்க்க விருவிருக்க ஓடுவார்கள். ஆனால் இன்று பெசடன் நகர் கடற்கரையில் முற்றிலும் மாறுதலாக பெண்கள் சேலையில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட பெண்கள், அதில் ஒரு நபர் கூட மேற்கத்திய உடைகள் அணியவில்லை. அனைவரும் சேலைகளை கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள் .
இந்த மாரத்தான் போட்டியில் இல்லத்தரசிகள், பணிபுரியும் பெண்கள் என அனைவருமே கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய உடையில் வண்ண வண்ணப் புடவைகளை கட்டியிருந்தார்கள். மடிசார், கண்டாங்கி, படுகர் இனமக்கள் தங்கள் கலாச்சாரப்படி உடை அணிந்து வந்திருந்தார்கள். மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மராத்தான் போட்டியில் பெண்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓடினார்கள்.
ஓட்டம் தொடங்குவதற்கு முன்பு பெண்கள் பலர் பாடலுக்கேற்றபடி உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டார்கள். தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரேவதி, தியா மகேந்திரன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அவர்கள் கூறும்போது பாரம்பரிய உடையில் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மாரத்தான் போட்டிகள் நடத்தும் நிலையில் நாமும் நடத்தினால் என்ன என்ற எண்ணத்தில் ஏற்பாடு செய்தோம் என்று தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி விமலா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். ராதிகா பரத், மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.