Latest News
ஆயுத பூஜை விடுமுறை… சென்னையில் இருந்து 2000 ஸ்பெஷல் பஸ்… போக்குவரத்து துறை அதிரடி…!
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைவருமே சிறப்பாக கொண்டாடுவார்கள். வரும் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை பண்டிகையும், மறுநாள் சனிக்கிழமை விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றது. அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்னையிலிருந்து நாளையும் நாளை மறுநாளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னை கோயம்பேடு கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 292 பேருந்துகள் இயக்கப்படும். நாளை அவற்றுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. பெரும்பாலானவர்கள் பத்தாம் தேதி பயணம் செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் 2000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்திருந்ததாவது ‘ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். நாளை பயணத்திற்கு 13 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். 10-ம் தேதி பயணம் செய்ய 31,000 முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்வதற்கு 18 ஆயிரம் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். நீண்ட தூரம் செல்பவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.