பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இது உலகம் முழுவதும் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.
அதைத்தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெயில் பன்றி இறைச்சி கொழுப்பு இருப்பதாக தகவல் வெளியானது. திருப்பதியில் லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு கலந்து விற்பனை செய்யப்பட்டு வரும் AR Foods நிறுவனம்தான் பழனி முருகன் கோயிலுக்கும் நெய் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது என சமூக வலைதள பக்கங்களில் வதந்திகள் பரவியது.
இந்நிலையில் இது முற்றிலும் பொய்யான செய்தி என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவி வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. மேலும் பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யிடம் இருந்து மட்டுமே பெறப்படுகின்றது என இந்து அறநிலையத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.