தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக்குகளை மூடவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லாவற்றையும் மூட அரசுகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.
ஆனால் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான டாஸ்மாக் கடைகள் இன்னும் மூடப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரியப்பிரகாசம் என்ற வழக்கறிஞர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் ‘சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் இது சம்மந்தமாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.