தமிழகத்தில் நேற்று 86 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 12,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 63, 000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன் தினம் வரையில் 485 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நான்கு பேர் பலியாகி இருந்தார். தமிழகத்தில் எண்ணிக்கை அதிகமாவதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது பெரும்பாலனவர்கள் டெல்லியில் நிஜாமுதீன் எனும் மாநாட்டில் கலந்துகொண்டதுதான்.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி அறிவித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகம் கொரோனா தொற்றால் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த 86 பேரில் மொத்தம் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் இருந்து மூன்றாம் கட்டத்துக்கு செல்லாமல் தடுப்பதற்காக கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.