Latest News
78 நிமிடம்… விடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்த 1200 மாணவர்கள்… குவியும் பாராட்டு…!
78 வது சுதந்திர தினத்தை ஊக்குவிக்கும் விதமாக 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள் 1200 மாணவர்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் மைதானத்தில் தேசிய சிலம்ப பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெலிங்டன் கண்டோன் மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் லோட்டே சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1200 மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு 78 நிமிடம் விடாமல் சிலம்பம் சுத்தி சாதனை நிகழ்த்தி இருந்தார்கள்.
அப்போது வீரர் வீராங்கனைகள் கண்ணை கட்டியும், பானை மீது நின்றும் சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுற்றி ராயல் புக் உலக சாதனையில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
குன்னூர் சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கராத்தே, கேரம் போர்டு, ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் கேடயங்கள் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.