Latest News
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்…அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!…
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பலவேறு பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையின் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடப்பது தொடர்கதை ஆகி வருகிறது.
போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தங்களது இஷ்டம் போல வாகனங்களை ஓட்டுவதால் தான் உயிரிழப்பு, நிரந்தர பாதிப்பு, படுகாயம் போன்ற சோகங்கள் நடப்பதாக ஆய்வுகள் சொல்லி வருகிறது.
ஆனால் அநேக இடங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
மாட்டின் உரிமையாளர்களின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என பொது மக்கள் புகார் சொல்லிவருவதும் தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து சட்டசபையில் இன்று விவாதிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு. இந்த விஷயத்தில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என சொல்லியிருக்கிறார்.
இது போல சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் முதன் முறையாக பிடிபடும் போது அதன் உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறை பிடிபடும் போது அபராதம் இரண்டு மடங்காகப்பட்டு பத்தாயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து இதே தவறை செய்யும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் விதமாக மூன்றாம் முறையாக பிடிபடும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஏலம் விடப்படும் என எச்சரித்துள்ளார்.
அமைச்சர் சொல்லியது போல சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்படும் பட்சத்தில் விபத்து அச்சுறுத்தல் நீங்கி நிம்மதி கிடைத்து விடும் வாகன ஓட்டிகளுக்கு.