Latest News
பொய் செய்திகளை பரப்புவதே அண்ணாமலைக்கு வேலை…எடப்பாடி பழனிசாமி காட்டம்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கேற்காத அதிமுக குறித்த அண்ணாமலையின் விமர்சனத்திற்கு தமிழக எதிர்க் கட்சித்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கேற்றிருந்தால் அதிமுகவிற்கு ஐந்தாவது அல்லது ஆறாவது இடமே கிடைக்கும் என பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை சொல்லியிருந்தார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசினார் பழனிசாமி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஏற்கனவே அதிமுக அறிவித்து விட்டது.
இப்படி இருக்கும் போது அதிமுக குறித்து அண்ணாமலை பேசுவதற்கான அவசியத்தை பற்றி குறிப்பிட்டார் பழனிசாமி. அண்ணாமலை ஒரு ஞானி, அவருக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போலவே தான் அவர் எப்போது பேசுவார் என சொல்லியிருந்தார் பழனிசாமி.
2014ல் கூட்டணியமைத்து கோவையில் போட்டியிட்ட பா.ஜ.க. சமீபத்திய தேர்தலில் குறைவான ஓட்டுக்களை பெற்றதை சுட்டிக்காட்டி அண்ணாமலை தமிழக பா.ஜ.க.வின் தலைவரான பிறகு அக்கட்சி வளர்ந்துள்ளதாக சொல்வதை எப்படி நம்ப முடியும் என கேள்வி எழுப்பினார்.
அதே போல சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிற்கு திமுகவிற்கு இடையேயான வாக்கு வித்தியாசத்தின் விவரங்களை பட்டியலிட்டுக் காட்டி ஐந்தாவது, ஆறாவது இடம் குறித்த அண்ணாமலையின் விமர்சனத்திற்கு காட்டமாக பதிலளித்தார்.
மக்களிடம் பொய்யான செய்திகளை பா.ஜ.க. தமிழகத தலைவர் அண்ணாமலை பரப்பி வருகிறார். அதே போல அவதூறு பரப்புவது தான் அவருக்கு வேலை என கடுமையாக சாடியிருந்தார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் வாக்குப்பதிவு வருகின்ற பத்தாம் தேதி நடைபெற உள்ளது.