கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தமிழக அரசியல் களத்தை தீப்பற்றி எரிய வைத்துள்ளது. பல்வேறு கட்சிகளின் கண்டனங்கள், போராட்டங்கள். அரசுக்கு எதிரான விமர்சனங்கள், அதற்கு ஆளும் தரப்பிலிருந்து பதில்கள், எதிர் சவால்கள் என நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மரணம் நடந்த பிறகு ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் கவனமுமே கருணாபுரம், மாதவச்சேரி மீது தான் இருந்து வருகிறது. தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக – பாஜகவிற்கு தொடர்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது என சொல்லியிருக்கிறார்.
கள்ளச்சாராய மரணத்தை வைத்து இந்த இரண்டு கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடுகிறது என்றார்.

காவல் துறையை தன் வசம் வைத்திருந்த முன்னாள் முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு அந்த துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா?, அதனால் தான் சிபிஐ விசாரணையை கோருகிறாரா? என கேள்வி எழுப்பினார்.
கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டதுமே தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு நீதி விசாரணை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல பழனிசாமி பேசுகிறார் என சாடினார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரனையை கேட்கும் பழனிசாமி டென்டர் முறைகேடு வழக்கில் நீதிமன்றம் வரை சென்று எதற்காக சிபிஐ விசாரணைக்கு தடை கோரினார்? என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.