தேர்தல் விதிமுறைகள் ஜி.பி.எஸ்,

தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க – ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்!

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் வாகன சோதனைகளில் மேற்கொண்டு வந்ததை அடுத்து, ஜி.பி.எஸ் இயந்திரம் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்தல், வேட்பாளர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்தல், கட்சிக் கொடிகள் கட்டுதல், விதிமீறல் குறித்த புகார்களை 18004257024 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க ‘ஜி.பி.எஸ்’ தொழில்நுட்பம், கட்டுப்பாட்டு அறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் நோடல் அதிகாரியும், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருமான ஆர்.கோவிந்தராஜூலு கூறியதாவது:

தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததும், புகார் வந்த பகுதிக்கு அருகில் பறக்கும் படை உள்ளதா? என்று ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மூலமாக டிராக்கிங் செய்யப்பட்டு, அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். பறக்கும் படையினரும் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்புவார்கள். விசாரணையின் அடிப்படையில் புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பறக்கும் படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்கள். நிலையான குழுவினர் ஒரே இடத்தில் சோதனைச் சாவடி அமைத்து தணிக்கையில் ஈடுபடுவார்கள். ஒளிப்பதிவு குழுவினர் தணிக்கை மற்றும் விதிமீறல்களை பதிவு செய்து, குறுந்தகட்டில் பதிவு செய்து அனுப்புவார்கள். பறக்கும் படை சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.