தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர் !

தேர்தல் தலைமை அதிகாரி சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், சென்னையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா மற்றும்தேர்தல் ஆணையர்கள் அஷோக் லவாசா, சுஷில் சந்திரா மற்றும் இணை தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகின்றனர்.

தமிழகத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தற்போது, தமிழகத்தில் பல கோடி ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி என பறிமுதல் செய்து வருகின்றனர்.இவர்கள், சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அந்நிலையில், இன்று பிற்பகல், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அதன்பின் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் தொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள், காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கின்றனர். அதை தொடர்ந்து தலைமைச் செயலர், டிஜிபி, வருமானவரித் துறை இயக்குநர் ஜெனரல், சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான முக்கியத்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.