Tamilnadu Politics
திமுகவுடன் கூட்டணியா? – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?
திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கொடுத்த பேட்டி குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
40 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் சமீபத்தில் நடந்து முடிந்தது. மேலும், 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் பல தொகுதிகளில் திமுக பல இடங்களில் வெற்றி பெறும் என ஏற்கனவெ கருத்துக்கணிப்புகள் வெளியானது. அதேபோல், சட்டமன்ற தொகுதிகளில் நாங்கள் பல இடங்களில் வெல்வோம் என தினகரன் ஆதரவு தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து கூறி வருகிறார்.
செய்தியாளர்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் “22 தொகுதிகளின் முடிவு வெளியானதும், சட்டமன்றத்தில் திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும். அதில் நாங்களும் இணைந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம்” என பேட்டி கொடுத்தார். எனவே, அமமுகவும், திமுகவும் மறைமுக கூட்டணி அமைத்துள்ளர் என அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தினகரன் “தன் மனதில் பட்டதை தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.எங்களிடம் தற்போது 4 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எனவே, திமுகவோடு இணைந்துதான் ஆட்சியை கவிழ்க்க முடியும். துரோகத்தை ஒழிக்க அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒன்று சேருவார்கள். இதில் என்ன கூட்டணி?” என பதிலளித்துள்ளார்.