என்னிடம் விளையாட்டு காட்ட வேண்டாம்

என்னிடம் விளையாட்டு காட்ட வேண்டாம் – கமல்ஹாசன் எச்சரிக்கை

இந்து விரோதி என்று கூறி தன்னிடம் விளையாட்டு காட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அவர் தெரிவித்தார். மேலும், முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதைக் கூறவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். அந்த இந்து தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே” என அவர் தெரிவித்தார்.

இதற்கு பாஜகவினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதோடு, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று திருப்பரங்குன்றத்தில் கமல் பேசிய போது, நான் கூறியது சரித்திர உண்மை என தெரிவித்தார். அப்போது, பாஜகவினர் சிலர் அவர் பேசிய மேடை மீது செருப்பை வீசினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்பின் பேசிய கமல் “என்னை அந்த விரோதி, இந்த விரோதி, இந்து விரோதி எனக் கூறி விளையாட்டு காட்ட வேண்டாம். நான் யாருக்கு எதிரி என்பது மக்களுக்கு தெரியும். அதுவும் நானாக வளர்த்துக்கொண்ட விரோதம் கிடையாது.

உங்களுடையை நேர்மையின்மை உங்களுடைய எதிரியாக என்னை மாற்றியது. ஒரு வருடத்தில் கட்சி இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டதால் ஏற்பட்ட பொறாமை காரணமாகவே இப்படி நடந்து கொள்கிறார்கள்” என கமல்ஹாசன் பேசினார்.