டிக்டாக்கில் கலக்கிய சிறுவன் படுகொலை

டிக்டாக்கில் கலக்கிய சிறுவன் படுகொலை!

சமீபகாலமாக டிக்டாக் வீடியோவில் கலக்கி வந்த சிறுவன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் என்கிற பகுதியில் வசிக்கும் தளவாய் என்பவரின் மகன் கொம்பையா(9). கொம்பையா 3ம் வகுப்பு முடித்து விட்டு இந்த வரும் 4ம் வகுப்பு செல்ல தயாராக இருந்தான். டிக்டாக்கில் பல டப்ஷ்மாஷ்  வெளியிடுவதில் அதிக ஆர்வம் உடைய கொம்பையா பல வீடியோக்களையும் வெளியிட்டுள்ளான்.

கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற கொம்பையா மாலை வரை வீடு திரும்பவில்லை. எனவே, அவனின் பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் அவனை தேடினர். ஆனால், திங்கட் கிழமை மாலை வரை சிறுவன் கிடைக்கவில்லை.

இதனால் பதட்டமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் பலரிடம் விசாரணை செய்து சிறுவனை தேடி வந்தனர். அப்போது,குறிச்சிகுளம் நான்குவழிச்சாலை அருகேயுள்ள முட்புதரில் ரத்த காயங்களுடன் கொம்பையாவின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கொம்பையாவை யாரோ கல்லால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். எனவே, ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார் 19 வயது வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

சுட்டியாய் திரிந்த வந்த சிறுவன் படுகொலை செய்யப்பட்டது அவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.