சென்னையில் மாநகரப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷடவசமாக தப்பிய செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளது. முற்றிலுமாக எரிந்து சேதமானது பேருந்து. தீயணைப்பு வீரர்கல் கடுமையாக போராடி நிலைமையை கட்டுக்குள் வந்தனர்.
சென்னை பாரீஸிலிருந்து சிறுசேரி சிப்காட்டை நோக்கி சென்றிருக்கிறது சென்னை மாநகர அரசு பேருந்து. பயணிகளை ஏற்றிச் சென்று புறப்பட்ட இந்த பேருந்து அடையாறு பஸ் டிப்போ அருகே வந்து கொண்டிருந்த போது திடிரென தீப்பிடிக்கத் துவங்கியுள்ளது. அடையாறு டெப்போ அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்ஸின் கியர் பாக்ஸ் அருகே இருந்து தீ பிடிக்கத் துவங்கியிருக்கிறது.

சாதூர்யமாக செயல்பட்ட பஸ் கண்டக்டரும், டிரைவரும் பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகள் அனைவரையும் பேருந்தை விட்டு கீழே இறக்கி விட்டனர்.
மளமளவென பற்ற துவங்கியது தீ. சிஎன்ஜி. கேஸ் நிரப்பப்பட்டு அதில் இயங்கி வந்த இந்த பேருந்து தீ பிடித்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைக்க முற்பட்டனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னரே அணைக்கப்பட்டது.
இதில் அரசு பேருந்து முற்றிலுமாக சேதமடைந்தது. தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திலிருந்த சென்னை மாநகர காவல் துறையினரும் தீ விபத்து நடந்த இடத்தை தங்களது கட்டுக்குள் கொண்டுவர மிகுந்த சிரமம் மேற்கொண்டனர்.
அந்த பகுதியிலிருந்த கடைகளின் உரிமையாளர்களும், பொது மக்களும் தீ விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்தே தீ விபத்து நடந்த இடமருகே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.