Latest News
ஆனைகட்டி அருகே யானைக்கு ஆந்த்ராக்ஸ்
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி சலீம் அலி வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் இன்று (ஜூலை 13) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண் யானை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. ஆந்த்ராக்ஸ் பாதிப்பைக் குறிக்கும் அறிகுறியாக ஆசனவாய் மற்றும் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதைப் பணியாளர்கள் கண்டதால், யானையின் ரத்த மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில், ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்று மதியம் யானையின் உடலை வனத்துறையினர் எரியூட்டினர். யானை உயிரிழந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஆர்.பெருமாள்சாமி கூறும்போது, “ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி ஆந்த்ராக்ஸ் பாதிப்பு உள்ள இடத்தில் இருந்து 8 கி.மீ சுற்றளவில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதன்படி, ஆலமரமேடு பகுதியில் உள்ள ஆடு, மாடுகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
வரும் நாட்களில் பெரியஜம்புகண்டி, சின்னஜம்புகண்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆடு, மாடுகளுக்குத் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். இதற்காக 3 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானை உயிரிழந்த பகுதியைச் சுற்றி 480 கால்நடைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.