வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, கோடை வெயில் அதிகமாக அடித்த நிலையில், இந்த மாதம் பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்நிலையில், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் என தெரிவித்தது.

காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.