IPL Highlights DC vs KKR

IPL 2019: சூப்பர் ஓவரில் டெல்லி அபாரம்! கொல்கட்டா ஏமாற்றம்!

ஃபெரோஷா கொட்லா டெல்லி மைதானத்தில், நேற்று இரவு நடந்த போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.அதில், டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.கொல்கட்டா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
நாயக் ஓப்பனிங் பேட் செய்தார்.

ஆனால், அவர் 7 (16) ரன்களில் வெளியேறினார். லின் 20 (18) உத்தப்பா 11 (6), ராணா 1(2) அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். 61 ரன்களில் 5 விக்கெட்டை இழந்து அந்த அணி தடுமாறியது. பின் களமிறங்கிய ரசல் வழக்கம் போல் அதிரடியில் இறங்கினார். 6 சிக்ஸ், 4 பவுன்டரிகளுடன் 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். மறுமுனையில், நம்பிக்கையுடன் விளையாடிய தினேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 185/8 ரன்கள் எடுத்திருந்தது.

186 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் ப்ரித்விஷா அதிரடியில் இறங்கி கொல்கட்டா அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டார்.

தவன் 16 (8) ரன்கள் எடுத்து அவுட்டானார். ப்ரித்விஷாவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியில் இறங்கினர். 32 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் அவுட்டானார். ரிஷப் பண்ட் 11 (15) ரன் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். ப்ரித்விஷா 55 பந்துகளில் 99 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இன்கிராம் மற்றும் பட்டேல் கடைசி ஓவரில் களத்தில் இருந்தனர். கடைசி 5 பந்துகளில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. கடைசி ஒரு பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஒரு ரன் எடுத்து மேட்சை ட்ரா செய்தனர்.மேட்ச் ட்ரா ஆனதால், சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்தது.

அடுத்து வந்த கொல்கட்டா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.இறுதியில் போராடி வெற்றியை சுவைத்தது டெல்லி அணி.