மலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்

மலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்

ராணிப்பேட்டை அருகே உள்ளது சோளிங்கர் இந்த ஊரில் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தீராத பல பிரச்சினைகளுக்கு இங்குள்ள யோகநரசிம்மரை வழிபட பல பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

சோளிங்கர் வந்து அங்குள்ள யோக நரசிம்மர் கோவில் அடிவாரத்தில் இருந்து 1300 படிகள் கடந்து சென்றால் யோக நரசிம்மரை தரிசிக்கலாம்.

நரசிம்மர் பொதுவாக துஷ்ட சக்திகளை விரட்டுபவர். நம்முள் இருக்கும் துஷ்ட சக்திகளையும் தீராத நம்முடைய துஷ்ட தோஷங்களை விரட்டுபவர் இவர். சுற்றிலும் உள்ள மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சென்னை,ஆந்திராவின் சித்தூர் , உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த நரசிம்மரை காண பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நினைத்தது நினைத்தபடி நிறைவேற இங்குள்ள நரசிம்மர் அருள்புரிகின்றார். 1300 படி ஏறி செல்ல செல்ல இயற்கை எழில் சூழ அழகாய் இருக்கும். ஆஞ்சநேயரின் அம்சமான குரங்குகள் இம்மலையில் அதிகம் உண்டு. சில குரங்குகள் வரம்பு மீறி சேட்டைகளும் செய்யும். கையில் அதிக பொருட்கள் இல்லாமல் சென்றால் நலம்.

மேலே சென்று யோக நரசிம்மரை தரிசித்தால் வாழ்க்கையில் வளம்பெறலாம்.

பக்த பிரகலாதனுக் காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத் தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை’’ என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்” என்கிறது இக்கோவிலின் ஸ்தல புராணம்.

கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ‘நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!’ என அருளினார்! அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.