Published
1 year agoon
மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக, திமுகவில் அமைக்கப்பட்டுள்ள நால்வர் குழு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, 21 மாநகராட்சிகள் 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று (மார்ச்2) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர். வரும் 4-ம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
திமுக கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, தங்களுக்கு அதிக செல்வாக்குடைய பகுதிகளில் முக்கியப் பதவிகளை பெற வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பதவிகளுக்கு சம்பந்தப்பட்டவரை தேர்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதவிர, சிக்கல் ஏற்படும் இடங்களில் சுயேச்சைகள், இதர கட்சிகளின் உறுப்பினர்களையும், தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளுடன் பதவிகளை பகிர்ந்து கொள்ளும் வகையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. அதன்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினருடன் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் பேசி வருகின்றனர். விசிகவுக்கு கடலூர் மேயர் பதவியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு துணை மேயர் பதவியும் வழங்க வேண்டும் என்று அக்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, சிவகாசி மேயர் பதவியை காங்கிரஸும் கேட்டு வருகிறது. இன்னும் சில கட்சிகள் நகராட்சி, பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கேட்டு வருகின்றன.
அதேசமயம், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக, பெரும்பான்மை தலைமைப் பதவிகளை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இன்று அல்லது நாளை முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.