இளம்பெண்ணின் உயிரை பறித்த அரசியல் பேனர் – சென்னையில் அதிர்ச்சி

இளம்பெண்ணின் உயிரை பறித்த அரசியல் பேனர் – சென்னையில் அதிர்ச்சி

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பயணிக்கும் சாலையில் எதற்கெடுத்தாலும் பேனர் வைப்பது தற்போது பேஷன் ஆகிவிட்டது. அரசியல் தலைவர்களை வரவேற்பது, திருமண வாழ்த்து உள்ளிட்ட பல காரணங்களுக்கும் சாலைகளின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதுவும் தற்போது திருமண முகூர்த்த காலம் என்பதால் சாலைகள் தோறும் ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாலையில் இதுபோல் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது, குரோம்பேட்டையில் வசித்து வரும் சுபஸ்ரீ(23) என்கிற இளம்பெண் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அவரின் மீது விழுந்தது. இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி ஒன்று அவரின் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலைகளின் நடுவில் வைக்கப்படும் பேனர்களை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.