தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வந்தது. இந்தாண்டு பருவமழைப் பொய்த்ததே இதற்குக் காரணம். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில் வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசி அது அனல் காற்றாக வீசக்கூடும். இதனால், இயல்பை விட 5 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், சென்னை உள்ளிட்ட சில கடலோர மாவட்டங்களில் அனல் காற்று இருக்காது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். அனல் காற்று வீசுவதால், வயதான பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.