ஆன்மிக மணம் கமழும் வள்ளிமலை முருகன் கோவில்

ஆன்மிக மணம் கமழும் வள்ளிமலை முருகன் கோவில்

முருகன் வள்ளியை மணம் முடித்த இடமாக வள்ளிமலை முருகன் கோவில் விளங்குகிறது. வள்ளிமலை காட்டில்தான் வேடுவர் குலப்பெண் வள்ளியை முருகன் பார்த்திருக்கிறார். அங்குதான் தனது அண்ணன் கணேசர் உதவியுடன் வள்ளியை மணம் முடித்திருக்கிறார். இப்படி வள்ளிமலையின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வள்ளிமலை முருகன் கோவிலை சீர்படுத்தி மக்கள் பலரும் இதன் புகழை அறியுமளவு வைத்தவர் வள்ளிமலை சுவாமிகள் என்பவர். இவர் பல்வேறு ஆன்மிக காரியங்களை செய்தவர்.

1918ல் வள்ளிமலையில் தமிழ்ப்புத்தாண்டு அன்று படி பூஜை நடத்தினார். இன்றளவும் அங்கு படிபூஜை நடைபெற்று வருகிறது. 1944ல் பழனியில் திருப்புகழ் மாநாடு நடத்தினார். இங்குள்ள வள்ளி அம்மன் ஸ்வாமிகளுக்கு நேரடியாக காட்சி கொடுத்து தனது பெயரை பொங்கி என எழுதி காட்டி இருக்கிறார்.

இன்றளவும் இக்கோவிலில் பல அதிசய சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் 800 படிகளுக்கும் மேல் நடந்து சென்றால் வள்ளிமலையை அடையலாம். அங்கு குகைக்குள் குளிர்ச்சியாக முருகனை தரிசிக்கலாம்.

சுற்றிலும் தியானம் செய்வதற்கு அமைதியான இடங்கள் உண்டு. மலைப்பாங்கான இயற்கை எழில் சூழ இக்கோவில் காட்சியளிக்கிறது. இக்கோவிலை சீர்படுத்தி பல அற்புதங்கள் செய்த வள்ளிமலை ஸ்வாமிகளின் ஜீவசமாதி இங்குள்ளது.

வேலூர் காட்பாடி ஜங்சனில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது. வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இக்கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது.

ஒருமுறை வள்ளிமலை முருகன் கோவில் சென்று முருகனை மனமார தரிசித்து வாருங்கள் வாழ்க்கை வளம்பெறும் நலம்பெறும்.