Corona (Covid-19)
ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆசைப்படும் நாடு – பிசிசிஐ பதில் என்ன?
ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது ஐக்கிய அரபுகள் அமீரகம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து மார்ச் 20 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் மாதம் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் ஏப்ரலிலும் ஊரடங்கு தொடர்ந்ததால் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் குறித்து அறிவிப்பு வெளியாகாது என கூறப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி சில வாரங்களுக்கு முன்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி ‘ இப்போதுள்ள நிலைமையில் எப்படி வெளிநாடுகளில் இருந்து வீரர்களைக் கொண்டு வருவீர்கள். மே மாதத்தின் நடுப்பகுதி வரை இப்படிதான் நிலைமை இருக்கும். தற்போதைய நிலைமை உலகின் எந்தவொரு விளையாட்டுக்கும் சாதகமானதாக இல்லை. ஐபிஎல்லை மறந்துவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்து இலங்கை பிசிசிஐ-யிடம் ஆலோசனை நடத்தியது. ஆனால் அதை பிசிசிஐ நிராகரித்தது. இதையடுத்து இப்போது ஐக்கிய அரபுகள் அமீரகமும் அதே வேண்டுகோளை விடுத்துள்ளது. அது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் இந்த ஆண்டு நடக்காவிட்டால் பிசிசிஐ க்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.
