Latest News
வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஈச்சன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை கே.ராதா இடமாறுதல் தொடர்பான கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:
கல்வித் துறையில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தரத்தில் சந்தேகம் இல்லை. ஆனால் மாணவர்களின் தரம் தனியார் பள்ளி மாணவர்கள் அளவுக்கு இல்லை. எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி, பொறுப்புகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் துறை ரீதியான விஷயங்களில் தலையிட்டு குழப்பத்தை உருவாக்குகின்றன. ஆசிரியர்களின் உரிமைகள் என்ற குடையின் கீழ் இவை நடைபெறுகின்றன. எனவே தமிழகத்தில் தனியாக தொழில் செய்யும் ஆசிரியர்கள், பகுதி நேர வேலை செய்வது, டியூஷன் சென்டர்கள் நடத்துவது, வீடுகளில் டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் ஆகிய தகவல்களை சேகரிக்க பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் மாவட்டம்தோறும் சிறப்புக் குழு அமைக்க வேண்டும். இந்த விதிமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்களை மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் தெரிவிக்க தனி தொலைபேசி எண், மொபைல் எண், வாட்ஸ் அப் எண் ஏற்படுத்தி, பள்ளிகளில் அனைவரும் பார்க்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதத்தை மதிப்பீடு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தயக்கம் காட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். நடத்தை மீறலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நிர்வாக ரீதியான இடமாறுதல் வழங்கலாம்.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்பான தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சங்கங்கள், சங்க நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
