40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் – தினகரன் அதிரடி

287
40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் - தினகரன் அதிரடி

அதிமுக கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகி விட்டது. அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணியும் உறுதியாகியுள்ளது. அதிமுக, பாமக உடனான பேச்சுவார்த்தை நேற்று காலை முடிவுக்கு வந்தது. முடிவில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்தார். மேலும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் பாமகவிற்கு ஒதுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அதேபோல், பாஜகவுடனான பேச்சுவார்த்தையும் நேற்று முடிவிற்கு வந்துள்ளது. இதற்காக பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் முன் அறிவித்தார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகியவை இணைந்தது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தினகரன் “பாமகவுடன் கூட்டணி வைப்பதை ஜெயலலிதாவின் ஆன்மா கூட  மன்னிக்காது. பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமம். இடுப்பில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கப்போகிறார்கள். அதிமுக – பாஜக – பாமக ஒரு பலவீனமான கூட்டணி. 40 தொகுதியிலும் தோற்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளனர். பிரதமரை தமிழகம்தான் நிர்ணயிக்கும். அந்த வாய்ப்பு அமமுகவிற்கே உண்டு” என அவர் கூறினார்.

பாருங்க:  மக்களவை தேர்தல் போட்டியிடுவேன் - கமல்ஹாசன் அதிரடி