கடந்த 1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அவதாரம் எடுத்தவர் இசைஞானி இளையராஜா.
இசைத்துறையில் இவர் செய்யாத சாதனையே இல்லை எனலாம். எல்லா பாட்டும் நல்ல பாட்டுதான் . ஆனால் இசைஞானி பாட்டு போல மனதை உருக்கும் பாடல்களை, உள்ளத்தில் உணர்வோடு புகுந்து ஊஞ்சலாடும் பாடல்களை போல் இனி யாராலும் தர முடியாது என்பதே நிதர்சன உண்மை.
80கள் முதல் 90கள் வரை நிற்க நேரமில்லாமல் இசைத்தவர் இசைஞானி இளையராஜா. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்களுக்கு கூட ரொம்ப சாதாரணமாக இசையமைத்து கொடுத்தது ஆச்சரியம்தான்.
அதிக படங்களில் அந்த நேரங்களில் வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு 3 படங்களில் பணி செய்தாலும் எல்லா படத்திலும் அதிக கவனம் செலுத்தி ஏனோ தானோவென்று இசைக்காமல் மிக திறம்பட இசையமைத்து கொடுத்தவர் இளையராஜா.
உணர்வே இல்லாமல் படம் எடுத்துவிட்டோம் என பயந்து கொண்டே இருந்த இயக்குனர்களுக்கு கூட தனது பின்னணி இசையால் வலுவூட்டியவர் இளையராஜா.
இன்று இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசைஞானி இளையராஜா சார்.