Tamil Flash News
குருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்? – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
அரசு பணிக்கான தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முறையில் தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்விகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது அரசு தேர்வு எழுதும் நபர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் செயலாளர் நந்தகுமார் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குரூப் 2 பாடத்தினால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக நன்மையே ஏற்படும். இதில், தமிழ் கேள்விகள் நீக்கப்படவில்லை. கொள்குறிப்பு வழியாக கேட்கப்பட்ட தமிழ் கேள்விகள், எழுத்து தேர்வாக விளக்கமாக எழுந்த வேண்டும் என்கிற நோக்கத்தில் புதிய முறை கொண்டுவரப்பட இருக்கிறது. இதன் மூலம் தமிழில் எழுத தெரியாதவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது என்பது உறுதியாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும், குரூப் 2 முதல் நிலை தேர்வில் தமிழக வரலாறு பண்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது. புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் தேர்வு எழுத போதுமான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.