சில காவல்துறை அதிகாரிகள் இயக்குனர் ரமணாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக காவல்துறை சார்பில் அவரிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயை வைத்து திருமலை, ஆதி மற்றும் சுள்ளான் ஆகிய படங்களை இயக்கியவர் ரமணா. திடீரென தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் சில வருடங்கள் அவர் திரைப்படங்களை இயக்கவில்லை. இவர் சமீபத்தில் குடும்பத்தினருடன் காரில் சென்ற போது, போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் 2 பேர் அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதோடு, அபராதத்தையும் விதித்தனர்.
இது தொடர்பாக ரமணா முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். இதை பலரும் பகிர காவல்துறைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது.
எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்வுக்கு மதிப்பளித்து, என் பதிவைப் பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும் துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்..
காவல்துறை உயர் அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி (உதவி காவல் ஆணையர்), ஷோபனா (ஆய்வாளர்) இருவரும் என் வீட்டுக்கு வந்து, மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்துவிட்டு வருத்தம் தெரிவித்தார்கள்.
மேலும், துணை கமிஷனர் பெரோஸ் கான் அப்துல்லா, என்னுடன் தொலைபேசி மூலம் நடந்தவற்றைக் கேட்டறிந்தார். நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ்வதற்கு உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.