சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து முடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஜோதிகாவுடன் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த படத்தை சூர்யா திரையரங்கிற்கு கொண்டு வரமுடியாமல் போனது. மேலும் ஊரடங்கு விலக்கப்பட்டாலும் முதலில் பெரிய நடிகர்களின் படங்களுக்கே தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமைக் கொடுப்பார்கள் என்பதால் படத்தை நேரடியாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைமிடம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவிடம் இதுபோல செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும், அதனால் இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.