Tamil Flash News
கிழிக்கப்பட்ட திருமாவளவன் பேனர்… பொங்கி எழுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்… சாலை மறியல் போராட்டம்…!
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 62 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்கள் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் பிறந்தநாள் கொண்டாட்டம் சார்பாக டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வந்தது.
இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சார்பில் பெரிய அளவில் டிஜிட்டல் பேனர் சாலையோரம் வைக்கப்படுகிறது. நள்ளிரவில் மர்ம நபர்கள் பேனரை கிழித்து எறிந்து விட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு பேனர் கிழிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவருக்கும் மேற்பட்டோர் சேலம் அரூர் சாலையில் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பேனர் கிழித்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு கட்சித் தொண்டர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் பேனர் கிழிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.