Entertainment
விவாதிக்க வேறு எதுவும் இல்லையா? இளையராஜா விவகாரம் குறித்து தங்கர் பச்சான்
புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம் ”மோடியும் அம்பேத்கரும்” என்ற நூலை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் முன்னுரை வரிகளுக்கு தற்போது ஆதரவும், எதிர்ப்புக் குரலும் எழுந்த நிலையில் இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும், சிலர் இளையராஜா மத்திய அரசின் எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டு பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் இணைத்து பேசியுள்ளார் என கருத்து தெரிவித்தனர்.
பலர் இளையராஜாவின் கருத்தை விமர்சிக்க ஒருவருக்கும் உரிமை இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் இளையராஜாவின் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும், வாதங்கள் புரிவதற்கும் வேறெதுவுமே இங்கே இல்லையா?
மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் பிழைப்பு வாதிகளும், ஊடக பிழைப்பு வாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும், குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
