ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்! சூர்யாவின் தைரியமான முடிவு!

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்! சூர்யாவின் தைரியமான முடிவு!

கோவில் உண்டியல்களில் காசு போடுவது குறித்து பேசி அது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் ஜோதிகாவுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள் கோவில்களைக் காட்டிலும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிக கவனம் செலுத்தாதது குறித்து பேசியிருந்தார். அவரது பேச்சில் ‘நான் படப்ப்டிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன். அந்த கோவில் பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் அருகில் இருந்த மருத்துவமனை பராமரிப்பின்றி மோசமாக இருப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் கோவில்களுக்கு ஏராளமான செலவுகளை செய்வதை காட்டிலும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜோதிகாவின் அவரின் குடும்பத்தாரையும் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் சிலர். இந்நிலையில் ஜோதிகாவுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கற கருத்து ‘சமூக ஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா அவர்கள்‌ பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

‘கோவில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாக கருத வேண்டும்‌’ என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, பலர்‌’ குற்றமாக பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மீகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கறார்கள்‌. ‘மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை’ என்பது ‘திருமூலர்‌’ காலத்து சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காதுகொடுத்துகேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாக கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. ‘கொரானா தொற்று’ காரணமாக இயல்பு. வாழ்க்கைப்‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்‌சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மீகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. ‘மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌’ என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்கு துணை நிற்கிறார்கள்‌. முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. ‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌’ என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌.’ எனத் தெரிவித்துள்ளார்.