நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விஷாகன் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.

தொழிலதிபர் மற்றும் நடிகர் விஷாகனுக்கும், ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாகவே அவர்களின் திருமணம் கோலகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 9ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நேற்று காலை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் சில சடங்குகள் நடந்தன. மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மாலை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு ரஜினி நடனமாடினார்.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் சவுந்தர்யா – விஷாகன் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ், கமல்ஹாசன், வைகோ, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசு, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மற்றும் ரஜினிக்கு நெருக்கமான சினிமா பிரபலங்களும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.