சிங்கம்பட்டி – திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்காவிலுள்ளது சிங்கம்பட்டி. ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. சுருக்கமாக, டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. ஒரு காலத்தில், இந்த ஜமீனில் “தோலுரித்தல்’ என்ற தண்டனை முறை, அதாவது திரும்ப திரும்ப தவறு செய்தவன், இவன் இனிமேல் திருத்தவே மாட்டான் என்ற நிலைக்குப் போய்விட்டவர்களுக்கு, முதுகுத் தோலை உரிக்கும் நுதன தண்டனையும் பின்பற்றப்பட்டுள்ளது.
முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா, சிங்கம்பட்டி சீமராஜா – இலங்கை கண்டியில் உள்ள ஆங்கிலேயக் கல்வி நிறுவனத்தில் பயின்றவர் என்பதால் நல்ல ஆங்கிலப் புலமை பெற்றவர். 1953-க்குப் பின்பு ஜமீன்கள் மறைந்துவிட்டாலும் கூட, அதன் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வகையில் சில பொருள்களைப் பாதுகாத்து வந்தவர். இவர் இந்தியாவில் வாழ்ந்த ஒரே ஒரு பட்டங்கட்டிய ஜமீனும், தமிழகத்தில் மன்னராட்சியில் ராஜாவாக முறைப்படி பட்டம் சூட்டிக் கொண்டவர்களில் எஞ்சி இருந்த ஒரே ஒரு ராஜா இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 90 வயதான முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா உடல்நலக்குறைவால் தனது வீட்டிலேயே நேற்று இரவு உயிரிழந்தார். தமிழநாட்டின் கடைசி ராஜாவின் மறைவு சிங்கம்பட்டி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டார மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.