இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் சமஸ்தானம் புகழ்பெற்றது. சுதந்திர போரில் சேதுபதி மன்னர்களின் பங்கு அளப்பறியது. இவர்கள் மருதுபாண்டியர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களுக்கு சுதந்திர காலத்தில் ஆதரவு அளித்தனர்.
மேலும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட எண்ணற்ற கோவில்கள் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ளன. கிழவன் சேதுபதி, விஜய ரகுநாத சேதுபதி போன்ற எண்ணற்ற சேதுபதி மன்னர்கள் அரண்மனை வாரிசுகளாக ஆட்சி செய்துள்ளனர்.
இவர்களின் வழிவந்தவர்தான் தற்போதைய மன்னர் வாரிசான குமரன் சேதுபதி அவர்கள்,தற்போது மன்னர் ஆட்சி நடக்கவில்லையென்றாலும் இவர்கள் மன்னர் வாரிசாக இராமநாதபுரம் சமஸ்தான ராஜாவாக இருந்து வந்தார். கோவில்கள் மற்றும் அரண்மனைக்கு சொந்தமான பல இடங்களை நிர்வகித்து வந்தார்.
இராமேஸ்வரம் கோவில் அறங்காவலர் குழு தலைவராகவும் இவர் இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் ஒரு காலத்தில் முக்கிய பதவிகள் வகித்த மன்னர் தற்போது அந்த பதவிகளில் இல்லை.
இந்நிலையில் உடல் நல கோளாறு காரணமாக இராமநாதபுரம் மன்னரான குமரன் சேதுபதி இன்று காலமானார். அவருக்கு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்களது கடும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.