Entertainment
சமாதி நிலை என்றால் என்ன? நித்யானந்தா தனது சரீரத்தை பயன்படுத்துவதில்லை- நித்யானந்தா கைலாசவில் இருந்து புது விளக்கம்
நித்யானந்த சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது சமாதி நிலை குறித்து கூறியிருப்பது என்னவென்றால்,
ஓர் அவதார புருஷர் சமாதி நிலைக்கு செல்வது என்பது அவர் தரித்த மனித சரீரம் என்கிற எல்லையைத் தாண்டி எங்கும் வியாபித்துள்ள பிரபஞ்ச உணர்வில் லயித்திருப்பதாகும். இந்த காலத்து மனிதர்களுக்கு புரிகின்ற வகையில் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் குழந்தைகள் செல் போனை கையில் வைத்துக் கொண்டு அதில் இருக்கும் எதோ ஒரு வீடியோ அல்லது வீடியோ விளையாட்டில் மூழ்கி இருக்கும் போது அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருப்பார்கள். கூப்பிட்ட குரலுக்கும் செவி சாய்க்க மாட்டார்கள். எத்தனை விபத்துக்கள் செல் போனில் மூழ்கியதால் நடந்துள்ளன என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு மனிதன் எதோ ஒரு விஷயத்தில் முழுவதும் ஈடுபடும்போது அவன் இந்த உலகத்தை மறந்து விடுகிறான். வெறுமனே மனித சரீரம் என்கிற எல்லைக்கு உட்பட்டு வாழும் மனிதனுக்கே இந்த உலகத்தை மறந்து, சுற்றி நடக்கின்ற விஷயங்களைப் பற்றிய உணர்வில்லாமல் வாழ முடியும் என்றால் எங்கும் வியாபித்துள்ள பிரபஞ்ச உணர்வில் வாழும் ஞானிகளும் அவதார புருஷர்களும் மிகுந்த கருணையோடு மனிதர்களுக்கு ஞானத்தை அளித்து அவர்கள் முக்தி அடைய வேண்டும் என்பதற்காகவே மனித சரீரம் என்கிற மிகச் சிறிய கூட்டிற்குள் தங்களை அடைத்துக் கொண்டு மனிதர்களோடு உறவாடுகிறார்கள், உரையாடுகிறார்கள்.
ஆனால் அவர்களுடைய உண்மையான சரீரம் என்பது மொத்த பிரபஞ்சமும் ஆகும். மிகப் பெரிய பணக்காரன் வேலை நிமித்தமாக வெளி நாடுகளுக்கு பயணிக்கும் போது அங்குள்ள விடுதிகளில் தங்கி விட்டு தன்னுடைய பரந்து விரிந்து இருக்கும் பங்களாவிற்கு திரும்புவது போலத்தான் அவதார புருஷர்களும் மனித இனத்தை மேன்மை படுத்துவதற்காகத்தான் மனித சரீரத்தில் சில வருடங்கள் தங்குகிறார்கள். அப்படித் தங்கும் போதும் அவர்கள் இடை இடையில் பிரபஞ்ச உணர்வில் மூழ்ல்குவது என்பது மிக மிக இயல்பான விஷயம். பல அவதார புருஷர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்த மக்களுக்கு இது ஒன்றும் புதிய ஒரு செய்தி அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சர், ஷீரடி சாய்பாபா போன்ற பல்வேறு மஹான்கள் வாழ்க்கையில், சமாதி நிலையில் இருந்து மீண்டும் மனித சரீரம் என்கிற எல்லைக்குள் பிரவேசிக்கின்ற நிகழ்ச்சி பல முறை நடந்துள்ளதை அவர்களுடைய பக்தர்கள் அறிவார்கள்.
வாழும் அவதார புருஷரும் இந்து மதத்தின் தனிப் பெரும் ஜெகத்குருவாக விளங்குகின்ற பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இப்போது சமாதி நிலையில் இருக்கின்றார். அதனால் அவர் தங்கியுள்ள மனித சரீரத்தை பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டுள்ளார். ஓர் அவதார புருஷர் சமாதி நிலைக்குச் சென்று திரும்புவது என்பது ஊருக்குப் போய் வரும் நம் தாத்தா பாட்டி அல்லது அப்பா அம்மா நமக்கு ஏதாவது தின்பண்டங்கள், துணிமணிகள் வாங்கிக் கொண்டு வருவது போல, மகான்களும் சமாதி நிலைக்குச் சென்று திரும்போது உயர்ந்த சக்திகளையம் சத்தியங்களையும் மனித குலத்திற்கு அளிப்பார்கள். ஊருக்குப் போய் இருக்கிற உங்கள் அப்பாவையோ அம்மாவையோ இறந்து விட்டார்களா என்று பக்கத்துக்கு வீட்டுக்காரர் கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? இல்லை அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அவதூறான செய்தியைப் பரப்பினால் எப்படி அதை எதிர் கொள்வீர்கள்? அது போலத்தான் சமாதி நிலைக்குச் சென்று இருக்கும் நம் குருநாதர் இறந்து விட்டார் என்று உலகம் பிதற்றினால் நாங்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரிப்போமா அல்லது அழுவோமா?
என கூறியுள்ளார்.
