திருச்சி பெண்கள் சிறை வார்டராக பணிபுரிந்து வந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி திருச்சி பெண்கள் சிறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தங்கியிருந்த காவலர் குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதல் கட்ட விசாரணையில், சிறையில் பணியாற்றும் வேறொரு காவலரை அவர் காதலித்ததாகவும், ஆனால், அவரை கைவிட்டு வேறுஒரு பெண்ணுடன் அவருக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாலும் மனமுடைந்து செந்தமிழ்ச் செல்வி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

செந்தமிழ்ச்செல்வியும், வெற்றிவேல் என்கிற காவல் அதிகாரியும் கடந்த ஒரு வருடமாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் வேறுவேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலை வெற்றிவேலின் சகோதரர் கைலாசம் ஏற்கவில்லை. கைலாசமும், திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணிபுரிந்து வருகிறார். கைலாசமும், அவரின் மனைவி ராஜசுந்தரியும் சேர்ந்து செந்தமிழ்ச்செல்வியை ஜாதி ரீதியாக திட்டியுள்ளனர். மேலும், வெற்றிவேலை சம்மதிக்க வைத்து வேறு பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்ய திட்டமிட்டனர்.
ஒருகட்டத்தில் வெற்றிவேலும் அதை ஏற்று காதலை கைவிட்டார். வருகிற 6ம் தேதி(நாளை) அவருக்கு திருமணம் நடக்க இருந்தது. எனவே, காதலர் ஏமாற்றி கைவிட்டதோடு, ஜாதிரீதியாக திட்டியதால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக செந்தமிழ்ச்செல்வின் தந்தை செல்லப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வெற்றிவேல், கைலாசம், ராஜசுந்தரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள அவர்கள் மூவரையும் தேடி வருகின்றனர்.