Corona (Covid-19)
தமிழகத்தில் ரேபிட் சோதனைகள் ஆரம்பம்! முதலில் முதல்வரின் மாவட்டத்தில்!
சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் தமிழகத்தில் சோதனைகள் நடக்க ஆரம்பித்துள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழகம் வாங்கவிருந்த நிலையில் அதை மத்திய அரசு தடுத்து தாங்களே வாங்கி மொத்தமாக மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வோம் என அறிவித்தது.
இதையடுத்து நேற்று சீனாவில் இருந்து இந்தியா வந்த கிட்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டன. அங்கிருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் சேலத்தில் முதல்முதலாக இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் சோதனை செய்யப்பட்டு 30 நிமிடத்தில் முடிவு வெளியாகியுள்ளது. 18 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுபோலவே சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளிலும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.