நடிகர் ரஜினி துவங்கவுள்ள அரசியல் அதிரடி பற்றிய சில தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.
அரசியலுக்கு வருவதாய் ரஜினி அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டது. நடு நடுவில் திடீரென அவர் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வந்ததே தவிர அவர் இன்னும் தன் கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை. இது சமூக வலைத்தளங்களிலும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் ரஜினி தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கு பின்பும் அவர் அரசியலில் தீவிரமாய் இறங்குவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்பதும், ஆனால் அமைதியாக அடுத்த படத்திற்கு அவர் தயாராவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவரின் அரசியல் நடவடிக்கைகள் விரைவில் வேகமெடுக்கவுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் செயல்படுத்தாத பல திட்டங்களை ரஜினி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 234 தொகுதிகளிலும் ஒரு அலுவலகத்தை அமைத்து, அங்கே படித்த இளைஞர்களை பணிக்கு அமர்த்தப்பட இருக்கிறார்கள். அந்த தொகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அளிக்கும் தகவல் இணையம் மூலம் தலைமைக்கு தெரிவிக்கப்படும் என ரஜினி மன்ற நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.