Corona (Covid-19)
250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?
மதுரையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுவகைகள் திருடு போகும் அபாயம் உள்ளதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகளை திறப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
ஆனாலும் மே 7 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை திறந்து 294 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இந்நிலையில் டாஸ்மாக்கை மூட சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் ‘ஊரடங்கு விதிமுறைகள் மதுக்கடைகளில் மீறப்படவில்லை.’ எனக் கூறியுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள் திருடுபோகும் அபாயம் இருப்பதால் 250 டாஸ்மாக் கடைகளுக்கு சுழற்சி முறையில் 2 போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலிஸார் டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் சுணக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
