Connect with us

நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

Tamil Flash News

நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

கரோனா ஊரடங்கின்போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார்.

வாகன சோதனையின்போது போலீஸார் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக காவல் துறையினருக்கான வழிகாட்டுதல்களை வழங்கி அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

மத்திய, மாநில அரசுத் துறைஅதிகாரிகள், ஊழியர்கள், நீதிமன்றம் உள்ளிட்ட நீதித் துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அலுவலுக்காக பயணம் மேற்கொள்ளும் சூழலில், அடையாள அட்டையை பார்வையிட்டு அவர்களை அனுமதிக்க வேண்டும்.

அத்தியவசியப் பணிகளான பால் விநியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவம் மற்றும் அதுசார்ந்த சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு, எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோரின் அடையாள அட்டையை பார்வையிட்டு உடனே அனுமதிக்க வேண்டும்.

விவசாய விளைபொருட்கள், காய்கறி, பழங்கள், கறிக் கோழிகள், முட்டை போன்றவற்றை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடைசெய்யக் கூடாது.

9-ம் தேதி முழு ஊரடங்கு என்பதால், உணவகங்களில் காலை 7 முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். அந்த நேரத்தில், உணவு டெலிவரி செய்யும் மின்வணிக நிறுவனப் பணியாளர்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு, வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு செல்வோர் அழைப்பு கடிதம் காட்டினால் அனுமதிக்க வேண்டும். 9-ம் தேதி யுபிஎஸ்சியின் சிவில் சர்வீசஸ் தேர்வு நடப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாருங்க:  நீட் தர்மபுரி மாணவரின் தற்கொலை- கஸ்தூரியின் கருத்து

விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்கு செல்கிற மற்றும் அங்கிருந்து வீடு திரும்புகிற பயணிகளை அனுமதிக்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணிக்காக செல்வோரை அனுமதிக்க வேண்டும். அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து சொந்த ஊர் திரும்புவோரையும் அனுமதிக்க வேண்டும்.

சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். இரவு நேரங்களில் காவலர்கள் தடுப்பான்கள் அமைத்து, ஒளிரும் மேற்சட்டை அணிந்து பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பெருநகர காவல் சரகஎல்லைக்கு உட்பட்ட பகுதியில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் 6-ம் தேதி இரவுநேர ஊரடங்கை மீறி வெளியேசுற்றியது தொடர்பாக 547 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். முகக் கவசம் அணியாதது தொடர்பாக 5,223 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.10.45லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

‘ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை பெருநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

 

More in Tamil Flash News

To Top