தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக, பாமக உடனான பேச்சுவார்த்தை இன்று காலை முடிவுக்கு வந்தது. முடிவில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாஜகவுடனான பேச்சுவார்த்தையும் முடிவிற்கு வந்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் முன் அறிவித்தார்.
அதன்பின் பியூஸ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்றனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் “அரசியல் குறித்து பேச விஜயகாந்தை சந்திக்க வரவில்லை. அவர் எங்களின் நண்பர். அவரின் உடல் நிலை குறித்து விசாரிக்கவே வந்தேன். எல்லா நேரத்திலும் அரசியல் பேச வேண்டும் என அவசியமில்லை” என தெரிவித்தார்.
இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.