தமிழ்க்கடவுள் முருகனுக்கு கோவில் இல்லாத இடங்களே இல்லை. அதிலும் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப சின்னக்குன்றாக இருந்தாலும் அங்கே ஒரு முருகன் கோவில் இருக்கும்.
இந்த முருகன் கோவிலும் அப்படித்தான் ஒரு சிறிய மலையில் இருக்கிறது. பொதுவாகவே கொங்கு நாடுகளில் மலைகளில் முருகன் கோவில்கள் அதிகம் உண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
நாம் பார்க்க இருக்கும் இந்த முருகன் கோவில் சேலத்தில் உள்ளது. தென்மாவட்டங்களிலிருந்து செல்வோர் சேலத்தின் முதல் ஸ்டாப்பான சீலநாயக்கன்பட்டி பைபாஸில் இறங்கி விடவேண்டும்.
அந்த இடத்திலேயே நின்று திரும்பி பார்த்தால் மலைமேல் கோவில் தெரியும். இரண்டு கிமீ மலையில் நடந்தோ காரிலோ சென்றால் கோவிலை அடையலாம்.
இங்கு அகத்திய மகரிஷி வழிபட்டுள்ளார்.
இந்த கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. சித்தர்கள் வாழும் மலையாகவும் இந்த மலை கருதப்படுகிறது. இம்மலையில் மூன்று நிலைகளில் மூன்று கோயில்கள் உள்ளன. சௌடேஸ்வரி அம்மன் கோயில், பாலமுருகன் கோயில், சத்யநாராயண சித்தர் கோயில் ஆகியவை உள்ளன.
இம்மலையினை சுற்றியுள்ள நான்கு மலைகள் இம்மலையின் கை கால்கள் என அழைக்கபடுகின்றன ஸ்கந்த கிரி, நாமகிரி, குமரகிரி பத்மகிரி இம்மலை தலையாக விளங்குவதால் ஸ்தலமலை என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு சன்னதியில் உள்ள பாறையில் ஊற்றுபோல தண்ணீர் வருவதால் இம்மலை ஊத்துமலை எனப்படுகிறது.
இங்கு அகத்தியர் பூஜித்த மருத்துவகுணம் மிக்க ஸ்ரீசக்கரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அருகில் உட்கார்ந்து அதை பார்த்து சிறிது நேரம் தியானம் செய்தால் உடல் நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள பாலமுருகன் பக்தர்களின் வேதனைகளை தீர்க்கிறார். அருகிலேயே பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
மிகவும் அருள் மணக்கும் ஆன்மிகம் மணக்கும் இக்கோவிலுக்கு சென்றாலே மனம் நிம்மதியடையும்.